
சிதம்பரம், அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற “சிறப்பு முகாம்–2026” நிறைவு நாள் விழா சாமி சகஜானந்தர் மணிமண்டபத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மா. கனிமொழி வரவேற்புரை வழங்கினார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி ஐ. சித்ரா முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை வ. எழிலரசி தலைமை வகித்து பேசினார், பெற்றோராசிரியர் கழக தலைவர் த. ஜெயராமன் கலந்து கொண்டு, மாணவிகளின் கல்வியுடன் சமூகப் பொறுப்பு, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் ஈடுபாடு வளர்த்துக் கொள்வதன் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்,பந்தன் வங்கியின் துணை மேலாளர் கே. அன்பு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு “ஊட்டச்சத்து மற்றும் உடல் ஆரோக்கியம்” என்ற தலைப்பில் மாணவிகளுக்கு பயனுள்ள கருத்துகளை வழங்கினார். சமச்சீர் உணவு, சத்தான உணவுப் பழக்கம், தனிநபர் சுகாதாரம், உடற்பயிற்சி, போதிய தூக்கம் மற்றும் நோய்களைத் தடுப்பதில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.மேலும், மாணவிகளின் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் உடல் ஆரோக்கியம் தொடர்பான வினாடி–வினா போட்டி நடத்தப்பட்டது. சிறப்பாகப் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன,உதவி தலைமை ஆசிரியர் வெ. ரவிச்சந்திரன் “பருவநிலை மாற்றம், அதன் காரணங்கள் மற்றும் உலக வெப்பமயமாதல்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிகரித்து வரும் பசுமைக்குடில் வாயுக்கள், காடுகள் அழிப்பு, புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு போன்ற காரணிகளால் ஏற்படும் பருவநிலை மாற்றம் குறித்து விளக்கினார். மரம் வளர்த்தல், நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துதல், நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் போன்ற செயல்களில் மாணவிகள் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார், மேலும் மணிமண்டபத்தின் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன,“இன்றைய மாணவர்கள் நாளைய சமூகத்தின் பொறுப்பான குடிமக்கள்” என்பதை உணர்த்தும் வகையில், சிறப்பு முகாமின் மூலம் மாணவிகளிடம் சமூக சேவை, தலைமைப் பண்பு, ஒற்றுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதார விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்பு ஆகிய பண்புகளை வளர்க்கும் விதமாக அமைந்தது,பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி ஐ. சித்ரா சார்பில் முகாமில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன,நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். உதவி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பி. கலாராணி நன்றி கூறினார்.

Leave a Reply