
நாகர்கோவில், அக். 08,ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக தந்தை–மகன் உள்பட 3 பேர் மீது மேலச்சூரங்குடியைச் சேர்ந்த இளம்பெண் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
மேலச்சூரங்குடி பகுதியைச் சேர்ந்த சகாயராஜா மகள் ஆன்சலின் சுஜி. இவர் கடந்த 2023-ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு கோயம்புத்தூரில் வேலை பார்த்து வந்ததாகவும், இந்நிலையில் சுஜியின் நெருங்கிய உறவினரான ஈசாந்தி மங்கலம் துவரங்காடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் பாஸ்கர் ராஜ் ( 58) பாஸ்கர் ராஜ் மகன் ராஜேஷ் (27) பாஸ்கர் ராஜ் மனைவி டெய்ஸி பாய் (52) ஆகியோர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியதன் அடிப்படையில் அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனது வேலையை விட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
கடந்த 24.12.2025 அன்று 3 பேர் தங்களது வீட்டிற்கு வந்து, அரசு வேலை வாங்கித் தர ரூ.15 லட்சம் செலவாகும் என்று கூறியதாகவும், முதலில் அதனை நம்ப மறுத்தபோது ஒப்பந்தப் பத்திரம் எழுதித் தருவதாகக் கூறி நம்ப வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து தனது திருமணத்திற்காக பெற்றோர் சேமித்து வைத்திருந்த நகைகளை அடகு வைத்து, கடந்த 19.02.2026 அன்று முதல் தவணையாக ரூ.13 லட்சத்தை 3 பேரும் பெற்றுக்கொண்டதாகவும், அதற்கான ஒப்பந்தப் பத்திரத்தில் ராஜேஷ் கையெழுத்திட்டு வழங்கியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.பின்னர் கடந்த 26.05.2026 அன்று மேலும் ராஜேஷ் ரூ.2 லட்சம் பெற்றுக்கொண்டதாகவும், தன்னை 3 மாதங்களுக்குள் அரசு பணியில் சேர்த்துவிடுவதாகக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.3 மாதங்கள் கடந்தும் வேலை கிடைக்காததால் அவர்களிடம் கேட்டபோது, சென்னைக்கு சென்று வேலை தொடர்பாக பேசி வருவதாகக் கூறி காலம் கடத்தியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏற்கனவே பார்த்து வந்த வேலையையும் விட்டுவிட்டதாகவும், திருமணத்திற்காக வைத்திருந்த நகைகளை அடகு வைத்து ரூ.15 லட்சம் கொடுத்ததால் தற்போது வேலை, நகை மற்றும் பணம் ஆகியவற்றை இழந்து தனது வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கடந்த 02.10.2026 அன்று ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், போலீசார் தன்னை மற்றும் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரணை நடத்தியதாகவும் கூறியுள்ளார். விசாரணையின்போது பணம் பெற்றுக்கொண்டது மற்றும் உறுதிமொழி பத்திரம் வழங்கியது தொடர்பாக எதிரிகள் ஒப்புக்கொண்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், புகார் மனுவுக்கான ரசீதும் வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ள ஆன்சலின் சுஜி, இதனால் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து நேற்று மீண்டும் புகார் அளித்துள்ளார்.தன்னிடம் இருந்து பெற்ற ரூ.15 லட்சத்தை மீட்டுத்தருவதுடன், தன்னை நம்ப வைத்து பணம் பெற்றுக்கொண்டதாக கூறப்படும் 3 பேர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த புகாருடன் ரூ.13 லட்சம் வழங்கியதற்கான ஒப்பந்தப் பத்திர நகல், ரூ.2 லட்சம் வழங்கியதற்கான ஒப்பந்தப் பத்திர நகல் மற்றும் நகை அடகு வைத்ததற்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply