
கரூர்:கரூர் புதிய பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு – காலாவதி தேதி குறிப்பிடாத தின்பண்டங்கள் அகற்றம், தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.கரூர் திருமாநிலையூரில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் சார் ஆட்சியர் வெங்கடேஸ்வரன் தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் கடைகளில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதா என்றும், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் தின்பண்டங்கள் தரமானதாக உள்ளதா என்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வின்போது, காலாவதி தேதி குறிப்பிடப்படாத தின்பண்டங்கள் மற்றும் குளிர்பானங்களை அதிகாரிகள் அகற்றினர். மேலும், தேநீர்க் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த எண்ணெய் பலகாரங்களில் அதிகளவில் செயற்கை நிறமிகள் கலக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கடைகளில் இருந்த நிறமிப் பொடிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள், அவற்றை மாநகராட்சி வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.மேலும், இதுபோன்ற விதிமீறல்கள் மீண்டும் கண்டறியப்பட்டால் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Leave a Reply