
கோவையில் சட்ட பாதுகாப்பு இயக்கம் சார்பில் சட்ட நாள் உறுதிமொழி ஏற்பு – அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பையும், உரிமைகளையும் பாதுகாக்க உறுதியேற்பு!இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பர் 26-ம் தேதியை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சட்ட பாதுகாப்பு இயக்கம் சார்பில் சட்ட நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு சட்ட பாதுகாப்பு இயக்கத்தின்
கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜி. முஹம்மது ரஃபிக் தலைமை வகித்தார்.பொறியாளர் விஜயகுமார், சிராஜ்தீன், கலையரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில்,திராவிடர் கழக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன், கோவை ரவிக்குமார், நேரு தாஸ், வழக்கறிஞர் மயிலை செந்தில், மலரவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இதனைத் தொடர்ந்து, சட்டப் பாதுகாப்பு இயக்கத்தின் கோவை மாவட்ட பொறுப்பாளர் பேராசிரியர் காமராஜ் சட்ட நாள் உறுதிமொழியை வாசிக்க, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.உறுதிமொழியில்,” இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உண்மையான நம்பிக்கையும், பற்றும் கொண்டு அதன் மாண்பையும், மதிப்பையும் பாதுகாப்போம். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் குடிமக்களுக்கான கடமைகளை மதித்து நடப்போம்.சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உயரிய கோட்பாட்டை நிலைநாட்ட பாடுபடுவோம். சாதி, மதம், மொழி, இனம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும், சமூக நீதியையும் பாதுகாப்போம்.தீண்டாமை, பாகுபாடு, அநீதி மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்போம். அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களான நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைப் பின்பற்றி, ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாக்கத் தொடர்ந்து பாடுபடுவோம்.சட்டம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தி, ஒவ்வொருவருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்கவும், சட்டத்தின் ஆட்சி நிலைபெறவும் எங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம் என உறுதியேற்கிறோம் “என உறுதிமொழி ஏற்கப்பட்டது.சட்டத்தின் முக்கியத்துவம், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள பொறுப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave a Reply