
முஞ்சிறை வட்டாரப் பள்ளிகள் சார்பில் பிரமாண்ட உணவுத் திருவிழா – உதவி ஆட்சியர் தொடங்கி வைத்தார்நாகர்கோவில் – நவ – 27,கன்னியாகுமரி மாவட்டம், நீரோடித்துறை புனித நிக்கோலாஸ் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இளம் விஞ்ஞானிகளை கண்டறியும் அறிவியல் கண்காட்சியுடன் இணைந்து, முஞ்சிறை வட்டார தொடக்கக் கல்விப் பள்ளிகள் சார்பில் பாரம்பரிய உணவுப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் துரித உணவுக் கலாச்சாரத்தைத் தவிர்த்து, உடல்நலத்தைப் பாதுகாக்கும் பாரம்பரிய உணவுகளை மீண்டும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும், நமது பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இந்த உணவுத் திருவிழா நடத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் வேண்டுகோளின்படி, முஞ்சிறை வட்டாரக் கல்வி அலுவலர் சஜிலின் சுஜி தலைமையிலும், மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) ரமா முன்னிலையிலும் நடைபெற்ற இவ்விழாவை, மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆர். மோனிகா ஐ.ஏ.எஸ். தொடங்கி வைத்து வாழ்த்திப் பேசினார்.இதில் முஞ்சிறை வட்டாரத்தைச் சேர்ந்த 50 பள்ளிகள் பங்கேற்று, தங்களது பள்ளிகள் சார்பில் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவுப் படையல்களைக் காட்சிப்படுத்தின. நவதானிய உணவுகள், பிரண்டைத் துவையல், பனம் பழம் மற்றும் பனைமரப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு உணவு வகைகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.கண்காட்சியில் இடம்பெற்ற உணவுப் படையல்கள், புனித நிக்கோலாஸ் பள்ளித் தாளாளர் அருட்தந்தை ஜெனிஸ்டன் தலைமையிலான குழுவினரால் மதிப்பீடு செய்யப்பட்டன.இதில் நவதானிய உணவுகளை காட்சிப்படுத்திய பார்த்திவபுரம் அரசு நடுநிலைப்பள்ளி முதலிடத்தையும், பிரண்டைத் துவையல் மற்றும் பனம் பழம் உள்ளிட்ட உணவுகளை காட்சிப்படுத்திய சிலுவைபுரம் புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளி இரண்டாமிடத்தையும், பனைமர உணவு வகைகளை காட்சிப்படுத்திய முஞ்சிறை அரசு நடுநிலைப்பள்ளி மூன்றாமிடத்தையும் பெற்றன.பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் வெற்றி பெற்ற பள்ளிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.இந்த உணவுத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளராக சாத்தங்கோடு அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பால்விக்டர் செயல்பட்டார். நீரோடித்துறை புனித நிக்கோலாஸ் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வால்டின், கொளப்புறம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் டைட்டஸ், காருண்யபுரம் பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோதரி ஆரோக்கிய மேரி ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.பாரம்பரிய உணவுகளின் மருத்துவப் பயன்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நடைபெற்ற இந்த உணவுத் திருவிழா, பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தது.

Leave a Reply