JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை

செண்பகராமன்புதூர் ஊருக்குள் பேருந்துகளை இயக்க வேண்டும்
மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை

நாகர்கோவில்,

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் ஊருக்குள் பேருந்துகள் வந்து திரும்பிச் செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
மனுவில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி பணிமனையைச் சேர்ந்த தடம் எண் 19 பேருந்து, காலை சுமார் 9 மணியளவில் திட்டுவிளையில் இருந்து ஆரல்வாய்மொழிக்கு இயக்கப்படுகிறது. இந்த பேருந்து ஆரல்வாய்மொழி பேருந்து நிலையத்தில் மதியம் 1 மணியளவில் சுமார் 40 நிமிடங்களும், 3 மணியளவில் சுமார் 40 நிமிடங்களும் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் பேருந்தை செண்பகராமன்புதூர் ஊருக்குள் இயக்கி, பின்னர் ஆரல்வாய்மொழிக்கு திரும்பிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், செட்டிகுளம் பணிமனையைச் சேர்ந்த 33/A சர்வீஸ் பேருந்து இரவு 7.50 மணியளவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து ஆரல்வாய்மொழி பகுதிக்கு இயக்கப்பட வேண்டும். இந்த பேருந்து வடசேரி, இறச்சகுளம், தாழக்குடி, தோப்பூர், அவ்வையார் அம்மன் கோவில் வழியாக செண்பகராமன்புதூர் ஊருக்குள் வந்து ஆரல்வாய்மொழி செல்லும் வகையில் இயக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது இந்த பேருந்து தாழக்குடி போர்டு வைத்து ஆரல்வாய்மொழி வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஓட்டுநர், நடத்துநர் வசதிக்காகவா? பொதுமக்கள் வசதிக்காகவா?
பேருந்துகளை ஊருக்குள் இயக்காமல் பிரதான சாலையிலேயே இயக்குவதால் செண்பகராமன்புதூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று பேருந்துகளை பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செண்பகராமன்புதூர் பகுதியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதனால் மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், செண்பகராமன்புதூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருவதற்கு பேருந்து சேவை முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் பேருந்து சேவையை பெரிதும் நம்பியுள்ளனர்.
எனவே, தடம் எண் 19 மற்றும் 33/A ஆகிய இரண்டு பேருந்துகளையும் செண்பகராமன்புதூர் ஊருக்குள் வந்து திரும்பிச் செல்லும் வகையில் வழித்தடத்தை மாற்றி அமைக்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று பேருந்தை பிடிக்கும் நிலை தவிர்க்கப்படும்.
பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை பரிசீலித்து, செண்பகராமன்புதூர் ஊருக்குள் பேருந்து சேவையை இயக்க மாவட்ட நிர்வாகமும் போக்குவரத்துத்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *