கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற லாரன்ஸ்
தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக லாரன்ஸ் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தலைவர்களின் திருவுருவச் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் புதிய கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டார்.
முதலில் கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காமராஜர் நினைவு மண்டபத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் அரசு விருந்தினர் மாளிகை அருகே அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அகஸ்தீஸ்வரத்தில் அமைந்துள்ள முன்னாள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் எச்.வசந்தகுமார் மணிமண்டபத்திற்குச் சென்று, அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அங்குள்ள வசந்தகுமாரின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நாகர்கோவில் டெரிக் ஜங்ஷனில் உள்ள முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லாரன்ஸுக்கு, புதிதாகப் பொறுப்பேற்ற மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவபிரபு தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் லாரன்ஸ், இந்திரா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அங்கிருந்து குளச்சல் சென்ற அவர், அங்கு அமைந்துள்ள லூர்தம்மாள் சைமன் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து குளச்சல் பேருந்து நிலையம் முன்பு உள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் மாநில, மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply