
ஏற்காடு மலைப்பாதை பள்ளத்தில் 12 வயது சிறுமி சடலம் மீட்பு: டி.ஐ.ஜி., எஸ்.பி., நேரில் தீவிர விசாரணை!ஏற்காடு-நவம்பர்-27ஏற்காடு குப்பனூர் மலைப்பாதையில் வழுக்குப்பாறை அருகேயுள்ள பள்ளத்தில் 12 வயது மதிக்கத்தக்க சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்காடு .குப்பனூர் மலைப்பாதையில் உள்ள வழுக்குப்பாறை பகுதியில், சாலையோரத்திலிருந்து சுமார் 15 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சிறுமி ஒருவரின் உடல் கிடப்பதாக நேற்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.இது குறித்து தகவல் அறிந்த ஏற்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மலைப்பாதையில் சாலையோர பள்ளத்தில் 12 வயது மதிக்கத்தக்க சிறுமி உயிரிழந்த நிலையில் கிடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுமியின் உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவ இடத்திற்கு சேலம் சரக டி.ஐ.ஜி. தேவராணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) குத்தாலிங்கம் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் தீவிர சோதனை மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர்.உயிரிழந்த சிறுமி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? மலைப்பாதையில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? என்பது குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுற்றுலாத்தலமான ஏற்காடு மலைப்பாதையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply